சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சபாநாயகரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நடந்தது குறித்து அவர் நக்கீரன் இணையதளத்திடம் கூறியதாவது,
விளவங்கோடு, கிள்ளியூர், குமரி தொகுதியில் கனமழையால் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம். நேற்று இதுதொடர்பாக பேச முயன்றேன். வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இன்றும் பேச முயன்றபோது பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மீண்டும் பேச முற்பட்டபோது வாய்ப்பு தரப்படவில்லை.
அப்போது நான் சொன்னேன். தொகுதிப் பிரச்சனைகளை சட்டப்பேரவை நடக்கும்போது பேசினால்தான் தீர்வு கிடைக்கும் என்பதால் 3 பேருக்கு இழப்பீடுதர வேண்டும் என்று முயற்சி எடுக்கிறோம். அமைச்சர் கூட பதில் அளிக்க தயாராக உள்ளார். சாமானிய மக்களின் பிரச்சனை என்பதால் சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னபோது, நீங்களும் அமைச்சரும் தனியாக வெளியே பேசிக்கொள்வது இங்கே எங்களை கட்டுப்படுத்தாது என்று கையை இரண்டையும் இணைத்து காண்பித்து மைக்கில் சிரிக்கிறார். மிகவும் கண்ணியக்குறைவாக பேசுகிறார்.
சபாநாயகர்தான் இந்த அவையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியவர். ஆனால் அவரே இப்படி கண்ணியக்குறைவாக பேசுகிறார் என்றால் எந்த பெண் உறுப்பினருக்கு இவர் பாதுகாப்பு அளிப்பார். அப்படிப்பட்ட சபாநாயகர் இந்த அவைக்கு தேவையில்லை. தமிழக சட்டமன்றம் தலைக்குனிவை சந்தித்த நாள் இந்த நாள்.
மிகவும் தரக்குறைவாக சபாநாயகர் பேசியிருக்கிறார். சமூகத்தில் பெண் ஒருவர் முன்னேறுவது எவ்வளவு கடினமானது என்று இந்த உலகத்திற்கு தெரியும். நான் என் கணவனை இழந்து 25 நாளில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றிருக்கிறேன். எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. இந்த ஆட்சியை அமைத்துக் கொடுத்தது ஒரு பெண் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.
சம்மந்தப்பட்ட அமைச்சர் தங்கமணி எழுந்து, அவர் (விஜயதாரணி) என்னை வந்து பார்த்தது கிடையாது. அவர்கள் இழப்பீடு கேட்டார்கள். நான் அறிவிப்பதாக சொன்னேன். பேசுவதற்கு நீங்க அனுமதிக்கவில்லை என்றால் நானும் பேசவில்லை என்று கூறினார்.
பின்னர் என்னை அவைக் காவலர்களை வைத்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிடுகிறார். கட்டாயப்படுத்த்தி வெளியேற்றினார்கள். கை, கால்களை கீரி, வயிற்றை அமுக்கி, சேலையை பிடித்து இழுத்து பெண் காவலர்கள் வெளியேற்றினார்கள். என்னை தொடாதீர்கள், என்னை நெருங்காதீர்கள் என்று கத்தினேன். அவையே அதிர்ந்தது.
பெண் உறுப்பினரை மிகவும் கண்ணியக்குறைவாக பேசியது தவறு என்று எங்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ராமசாமி கேட்டார். அப்போது சபாநாயகர், கே.ராமசாமி நீங்கள் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறேன். நான் அந்த பொருள்படும்படி பேசவில்லை என்றார். காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
ஒரு பெண் எம்எல்ஏவாக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை இப்படி தரக்குறைவாக பேசும் சபாநாயகர் இந்த அவைக்கு தேவையில்லை. முதல் அமைச்சர் உடனடியாக இந்த சபாநாயகரை நீக்க வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்த மற்றொருவரை சபாநாயகராக நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.