விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் தனி தாலுக்கா அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை, அலுவலக ஊழியர்கள் தங்கள் அலுவலக பணி முடித்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் மறுநாள் காலையில் வழக்கம்போல் அலுவலகப் பணியாளர்கள் அலுவலகத்தை திறக்க வந்தனர்.
அப்போது அலுவலகத்தின் முன்பக்கக் கதவு, ஜன்னல்கள் மற்றும் அலுவலகப் பின் பக்கக் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் தாறுமாறாக உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அலுவலக ஊழியர்கள் உடனடியாக வட்டாட்சியர் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கண்டாச்சிபுரம் சப்- இன்ஸ்பெக்டர், அரகண்ட நல்லூர் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் அனைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.
போலீசார் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உடைக்கப்பட்டிருந்த ஜன்னல் கதவுகள் மற்றும் கண்ணாடிகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் குடித்துவிட்டு போதையில் நடமாடும் நபர்களின் வேலையாக இருக்குமா அல்லது சமூக விரோதிகள் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு உள்ளே செல்வதற்கு முயன்று இருப்பார்களா என பல்வேறு கோணங்களில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.