Skip to main content

அதிகாரிகளின் தொடர் அலட்சியம்... மழையில் நனைந்து நாசமான ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்...

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

தமிழ்நாடு முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் மூட்டைகள் வாங்கப்பட்டுள்ளது. பல இடங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை வாங்க கால தாமதம் செய்து வியாபாரிகளின் நெல் மூட்டைகளை வாங்கி அடுக்குவதாக விவசாயிகள் பல போராட்டங்கள் செய்த பிறகு வாங்கினார்கள். அதற்கும் ஒரு மூட்டைக்கு ரூபாய் 40 முதல் 50 வரை கமிசனாக கொடுக்க வேண்டி இருந்தது.
 


இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை அதே பகுதியில் உள்ள திறந்த வெளி குடோன்களில் பாதுகாப்பில்லாமல் அடுக்கி வைத்து மழையில் நனைய வைத்து நாசமாக்கினார்கள். மேலும் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை அருகில் உள்ள பாதுகாப்பு குடோன்களுக்கு தினசரி லாரியில் ஏற்றிச் சென்று பாதுகாக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பான குடோன்களில் வைக்கப்படுவதாகவும் திறந்த வெளி குடோன்களில் வைத்து பாதுகாப்பதாகவும் அதற்காக தார்ப்பாய்கள் வாங்கியதாகக் கணக்கு எழுதி பணம் எடுத்துள்ளனர். ஆனால் பாதுகாக்காப்படாமல் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் கிராமத்தில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கிய ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை மழைத் தண்ணீர் தேங்கும் பள்ளத்தில் அடுக்கி வைத்து அத்தனை மூட்டைகளும் தேங்கிய மழைத் தண்ணீரில் நனைத்து ஊரி நாசமானது. 
 


அவற்றை சத்தமின்றி குடோன்களுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் வாங்கிய நெல் மூட்டைகளை அதே இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் அடுக்கி வைத்துள்ளனர். பருவமழை மற்றும் வெப்பச் சலன மழை பெய்யப் போகிறது என்று வானிலை அறிக்கைகள் சொல்லப்படும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் நெல் மூட்டைகள் நாசமாகப் போகிறது.


அதே போல திருமயம் அருகில் உள்ள துளையானூர் கிராமத்தில் மழைத் தண்ணீர் செல்லும் வரத்து வாரி அருகில் கட்டப்பட்டுள்ள நெல் பாதுகாப்பு குடோனில் நெல் மூட்டைகளை வைக்காமல் திறந்த வெளியில் அடுக்கி வைத்து தார்ப்பாய்கள் இல்லாமல் கடந்த வாரம் பெய்த கனமழையில் நனைந்து பல ஆயிரம் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. இதைப் பற்றி எந்த அதிகாரியும் கவபை்பட்டதாகத் தெரியவில்லை. 
 

http://onelink.to/nknapp


வியர்வை சிந்தி விவசாயிகள் உற்பத்தி செய்து மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்படி நாசமாக்குவது வேதனை அளிக்கிறது. இந்த வேதனை நிகழ்வுகளை நேரில் பார்த்த சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் போய் நீதி கேட்க தயாராகி வருகிறார்கள். நீதிமன்றம் போகும் அதிகாரிகள் என்ன சொல்லி சமாளிப்பார்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் எஞ்சியுள்ள நெல் மூட்டைகளையாவது பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் இருந்தால் சரி. 


 

சார்ந்த செய்திகள்