Skip to main content

இளம்பெண்ணின் உடலை மரக்கட்டையில் சுமந்து சென்ற உறவினர்கள்; சாலை அமைத்து தர ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Ramadas has insisted that a special plan should be implemented to build roads for all villages

 

சாலையில்லாத காரணத்தால், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மரக்கட்டையில் தூக்கிச் சென்றதை காண்பதற்கு மிகவும் கொடுமையாக உள்ளது என பாமக நிறுவனம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நிலையில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி மலையடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை அவரது உறவினர்கள் தோள்களில் தூக்கி சுமந்து சென்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வேலூர் மருத்துவமனையில் இருந்து சாந்தியின் உடல் அவசர ஊர்தியில் எடுத்து வரப்பட்ட போதிலும், தொடர்ந்து கொண்டு செல்ல அடிப்படையான சாலை வசதிகள் கூட இல்லாத நிலையில், இந்த அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

 

உயிரிழந்தவர்கள் மரியாதையுடன் வணங்கப்பட வேண்டியவர்கள். ஆனால், உயிரிழந்த சாந்தியின் உடலை கொண்டு செல்ல சாலை இல்லாத நிலையில், மரியாதையுடன் வணங்கப்பட வேண்டிய அவரின் உடலை கால்நடைகளுக்கு இணையாக மரக்கட்டையில் கட்டி சுமந்து சென்றிருப்பது எவ்வளவு கொடுமையானது? இது தொடர்பான காணொலியை காண்பதற்கே மிகவும் கொடுமையாக உள்ளது. ஒருபுறம் ஜி20 மாநாட்டை நடத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டதாக பெருமை பேசிக் கொள்ளும் நம்மை,  நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்ற உண்மை சம்மட்டி அடியாய் தாக்குகிறது.

 

கடந்த மே மாதம் 28-ஆம் நாள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் அக்குழந்தை இறந்ததும், உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரால் சுமந்து செல்லப்பட்டதும் தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிகளை உலுக்கியது. ஒதிஷாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே நிகழ்ந்த அவலங்கள் தமிழ்நாட்டிலும் நடப்பதை சுட்டிக்காட்டிய  பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் அனைத்து மலைக்கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்; அதுவரை தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அதை செய்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

 

வேலூர் மாவட்டம் அத்திமரத்துக்கொல்லை நிகழ்வை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியதற்கு அடுத்த நாள் அத்திமரத்துக்கொல்லை கிராமத்துக்கு சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர், சாலை அமைத்துக் கொடுக்காததற்காக அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன், உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அறிவித்தார். அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மலைக்கிராமங்களுக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அடிப்படைக் கடமையைக் கூட அவரும், அரசும் செய்யத் தவறி விட்டனர்.

 

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் நிகழ்வுகள் தமிழகத்திற்கு பெரும் அவமானம் ஆகும். அத்தகைய அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது. இனியாவது அரசு விழித்துக்கொண்டு, அனைத்து மலைக்கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்