சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசினார். “உங்கள் மத்தியில் இப்போது ஒரு உண்மையை நான் சொல்கிறேன். எனக்கு திமுக ஆட்சியில் பிரச்சினை ஏற்பட்டபோது, என்னைப் பாதுகாத்தவர் அண்ணன் எஸ்.பி. வேலுமணிதான். 21 நாட்கள் என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். தொண்டர்களுக்குத் தோழனாக உழைக்கக்கூடிய அண்ணன் வேலுமணி என்னையும் பாதுகாத்தார்.
எங்கு பார்த்தாலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவாதம் நடைபெறுகிறது. இந்தக் காலம் திமுகவுக்கு இறங்குமுகம். அதிமுகவுக்கு ஏறுமுகம். எஸ்.பி. வேலுமணி அண்ணனுக்கு திமுக எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கிறது என்பது நமக்குத் தெரியும். வேலை செய்யக்கூடியவர்களை முடக்கிவிடும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுகவின் நடவடிக்கை இன்றைக்கு கேலிக் கூத்தாகிவிட்டது. திமுகவுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு திமுகவினர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலறுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. பிறரைக் கெடுக்க நினைத்தவர்கள் இன்று கெட்டுப்போய் உள்ளனர். வருங்காலம் அதிமுகவின் காலம்தான்.” எனப் பேசினார்.
அதிமுக தலைமை நிலையச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி அக்கூட்டத்தில் பேசியபோது, “திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பேசக்கூடியவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. செய்யாத குற்றத்துக்காக அவரை திமுக அரசு பழி வாங்கியது. ஒன்றுமே செய்யாத கே.டி. ராஜேந்திர பாலாஜியை கொலைக் குற்றவாளிபோல் போலீசார் தேடினார்கள். பொய் வழக்கு போடுவதையே திமுக தொழிலாகக் கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருப்பார்.” என்றார்.