மே 3 ந் தேதி...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள நம்பன்பட்டியை சேர்த்தவர் தமிழரசன் கம்பியாளர் (வயது 41) தமிழ்நாடு மின்சார வாரியம் ஆலங்குடி மேற்கு பிரிவில் கம்பியாளராக வேலை செய்கிறார். அரயப்பட்டி பகுதியில் ஒரு மின்மாற்றியில் மின்சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின் விபத்திற்குள்ளாகி உயிரிழந்தார்.
இன்று.. மே 7 ந் தேதி...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்தூர் அருகில் உள்ள சாத்தியடியில் மின்வாரிய ஊழியர் ஏனாதி முத்துவேல் நகரை சேர்ந்த ராசன் மின்கம்பத்தில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி பலியானர்.
அதே போல கஜா புயல் தாக்கிய நேரத்தில் இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் அருகே மின்பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மின் ஊழியர்கள் இருவர் அமைச்சர் விஜயபாஸ்கர் கண் முன்னே மின்சாரம் தாக்கி விழுந்தார்கள். அவர்களை அமைச்சரே மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினார். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது மின் வாரிய ஊழியர்களின் நிலை என்றால் கஜா புயலில் சாய்ந்த மின்கம்பிகளில் 10 நாட்களுக்கு மின்சாரம் வந்து ஒரு பெண்ணும் ஒரு இளைஞரும் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
அடுத்த சில நாட்களில் புதுக்கோட்டையில் 5 மாடுகள் பலியானது. வடகாட்டில் ஒரு சிறுவன் பலியானான். இப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 5 மாதத்தில் மின்சாரம் தாக்கி 20 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது.. ஒரு பக்கம் மின் வாரியத்தின் அலட்சியம் உயிர்பலிக்கு காரணமாகிறது. இன்னொரு பக்கம் அரசாங்கம் மின்வாரிய ஊழியர்களின் உயிர்களின் மீது அக்கறையின்றி மெத்தனம் காட்டுகிறது.
அதாவது கஜா புயல் மின்சாரம் மீட்பு பணிக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும், மின் பணியாளர்கள் வந்திருந்தனர். அதே போல கேரளா, ஆந்திரா மின் பணியளர்களும் வந்திருந்தனர். அதில் கேரள மின் பணியளர்கள் மட்டும் ஷூ, தலைக்கவசம், கை உறை, பெல்ட், எர்த் ஒயர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து பணி செய்தனர். மின்கம்பத்தில் ஏறியதுடன் எர்த் ஒயரை தரையில் பதித்துவிட்டே பணியை தொடங்கினார்கள். அதாவது கேரள மின் பணியாளர்களின் உயிர்கள் மீது அந்த மாநில நிர்வாகம் அக்கரையுடன் செயல்படுவதற்கு அதைவிட சான்று தேவையில்லை. ஆனால் தமிழக மின் பணியாளர்களுக்கு இந்த உபகரணங்கள் இல்லாததால் தான் அமைச்சர் கண் முன்பே மின் ஊழியர் பலியானார். அதே போல இப்பவும் மின் ஊழியர்களுக்கு மின் விபத்துகள் நடக்கிறது.
இனியாவது மின் ஊழியர்களின் உயிர் மீது அக்கரை கொண்டு அவர்களின் குடும்பங்களை மனதில் வைத்து பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றனர்.