தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழில் அதிபர். இவருடைய மகன் மணிகண்டன் (30). ஆசிரியர். இவருடைய மனைவி நியா. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். குறிப்பாக, மணிகண்டன் தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி நியாவை கரம் பிடித்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி அருகே உள்ள அய்யாகவுண்டர் காடு பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.
வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மணிகண்டன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை (டிச. 7) மாலை 3 மணியளவில், வழப்பாடி டவுனுக்கு வந்துள்ள நண்பர்களை பார்த்துவிட்டு வந்து விடுவதாக பள்ளியில் சொல்லிவிட்டு, மணிகண்டன் பள்ளியைவிட்டுச் சென்றார்.
அன்று இரவு 7 மணியளவில், தந்தை ராஜேந்திரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மணிகண்டன், பத்து லட்சம் ரூபாய் கேட்டு மர்ம நபர்கள் தன்னை கடத்தி வந்துள்ள அதிர்ச்சித் தகவலைக் கூறினார்.
இதுகுறித்து ராஜேந்திரன் மற்றும் மணிகண்டனின் மனைவி நியா ஆகியோர் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் கடத்தல் கும்பல் பேராவூரணி பகுதியில் காரில் சுற்றி வருவது தெரிய வந்தது.
சேலம் மாவட்ட போலீசார் தஞ்சாவூர் மாவட்ட போலீசாரையும் உஷார்படுத்தினர். கடத்தல் கும்பலை தேடும் பணிகள் தீவிரப்படுத்தியது ஒருபுறம் இருக்க, அந்த கும்பல் கேட்டுக்கொண்டபடி பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு செல்லும்படி ராஜேந்திரனையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
கடத்தல் கும்பல் சொன்ன இடத்திற்கு பணத்துடன் சென்ற ராஜேந்திரன், பணப்பெட்டியை கொடுக்க முயன்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். ஆசிரியர் மணிகண்டனையும் பத்திரமாக மீட்டனர்.
கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் சிக்கினர். மற்ற இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நபர்கள் பேராவூரணியைச் சேர்ந்த மகேஷ், தேனியைச் சேர்ந்த வீரா எனத் தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த மணியரசன் என்பதும் தெரிய வந்தது.
பிடிபட்ட நபர்களையும், ஆசிரியர் மணிகண்டனையும் போலீசார் வாழப்பாடிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், ஆசிரியர் மணிகண்டனும், தப்பியோடிய மணியரசனும் நண்பர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால், ஆசிரியர் மணிகண்டனே தந்தையிடம் பணம் பறிக்கும் நோக்கில் கடத்தல் நாடகமாடினாரா? அல்லது நிஜமாகவே கடத்தல் கும்பல் அவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிக்க முயன்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.