சோழப்பேரரசன் ராஜராஜ சோழன் குறித்து பேசிய திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீதுப் போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என வளியுறுத்தி திருவாய்ப்பாடியில் நீலபுலிகள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருவாய்ப்பாடி அம்பேத்கர் சிலை அருகில் நீல புலிகள் இயக்கத்தின் சார்பில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்லிய ரஞ்சித்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சைவ மடங்களில் உள்ள சொத்துக்களை தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீல புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் புரட்சிமணி தலைமையில் அக்கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால். தமிழகத்தில் உள்ள அனைத்து தலித் மக்களையும் ஒன்று திரட்டி நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடையும் என புரட்சிமணி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் முக்குலத்துப்புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் தலைமையிலான அவரது இயக்கத்தினர் நாகை மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் மனு அளித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதோடு முக்குலத்துப்புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
இந்தநிலையில் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறையில் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும்புயலை கிளப்பியுள்ளது.