சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 52 நாட்களாக, மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி, தொடர்ந்து நூதன முறையில் அறவழியில் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நூதனமாக செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக இயங்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி ஊழியர்கள், மருத்துவக் கல்வி கட்டணம், மருத்துவ இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரியும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படுவதாக கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலில் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துக்கள் உட்பட 113.21 ஏக்கர் நிலம் அரசுடைமையாகிறது.