
சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடைக் காலத்தில் சீரான மின் விநியோகம் அளிப்பது குறித்து இன்று (26.03.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின்சாரத்துறையின் மண்டல தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கோடைக்காலத்தில் தமிழகம் முழுவதும் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீராக மின் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எங்கெல்லாம் ஓவர்லோடு மற்றும் லோ வோல்டேஜ் இருக்கிறதோ அதையெல்லாம் கவனத்தில் கொண்டு புதிய பகுதியில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அதில் 250 துணை மின் நிலையங்களுக்கு நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுத் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இப்பொழுது பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கோடைக் காலத்தில் சுமார் 22 ஆயிரம் மெகாவாட் மின் தேவை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கத்தை விடக் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் தேவைப்படும். எனவே வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குத் தேவையான கூடுதல் மின்சாரத்துக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. மின்சாரத்துறையில் 3இல் 1 ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆகையால் மின்சாரத்துறையின் உள்ள அவசியமான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.