Skip to main content

பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விபத்து; சீரமைப்பு பணிகள் தொடக்கம்!

Published on 26/03/2025 | Edited on 26/03/2025

 

Roof collapses at Bharathiyar birthplace renovation work begins

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்  தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (25.03.2025) மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளைக் காப்பாளர் மகாதேவி அடைத்தார். அதன் பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக்கட்டைகள் விழுந்தன.

இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த காப்பாளர் மகாதேவி உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் உயர் அதிகாரிகள் பாரதியார் நினைவு இல்லத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியார் இல்லத்திற்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்தனர்.

அதே போன்று செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் வந்து பாரதியார் இல்ல சேதத்தைப் பார்வையிட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற போது அங்கு யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக  எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பாரதியார் நினைவில்லம் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதே சமயம் வீட்டின் பழமை மாறாமல் சீரமைக்குமாறும், விரைந்து பணிகளை முடிக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்