Skip to main content

மெரினா மாநகராட்சி கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை ரூ.5 ஆயிரம் நிர்ணயம்!- ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர், செயலர் ஆஜராக உத்தரவு!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

chennai marina beach fish shop, food shops chennai high court and corporation

ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில், 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், அக்கடைகளுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

chennai marina beach fish shop, food shops chennai high court and corporation

இன்றைய சூழ்நிலையில், 100 ரூபாய் வாடகை என்பது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், குறைந்த பட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாயாவது நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 

விரைவில் டெண்டரை இறுதி செய்து கடைகளைக் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக மாநகராட்சி விண்ணப்பித்தும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை உரிய பதில் அளிக்காததால், அதன் உறுப்பினர், செயலரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு,  விசாரணையை ஜனவரி 29- ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்