கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினம் 16செமீ மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடானது. பல ஏரிகள் நிரம்பி வழிவதாலும் மழைநீர் வடிகால்கள் நிரம்பி மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் வேலைகளுக்கு செல்பவர்களும் படகுகளிலும் டிராக்டர்களிலும் மழைநீர் தேங்கிய சாலைகளை கடக்க வேண்டியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களையும் டிராக்டர்களை கொண்டே மீட்கின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு வினாடிக்கு 5932 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.98 அடி அளவிற்கு நீர் உள்ளது. இதனால் 5000 கன அடிக்கும் அதிகமான நீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஓசூரில் இல்ல பேகப்பள்ளி அருகே உள்ள ஏரியில் நீர் நிறைந்து வெளியேறியதால் அருகில் இருந்த தரைப்பாலம் மூழ்கியது. இந்நிலையில் நல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் முழங்கால் அளவு தண்ணீர் இருந்த தரைப்பாலத்தில் நடந்து சென்ற பொழுது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சில தினங்களுக்கு முன் கூகிள் மேப்பை பார்த்து கார் ஓட்டிக்கொண்டு வந்த நபர் காருடன் வெள்ளத்தில் சிக்கியதும் இந்த பகுதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.