காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடந்தது. இதில் விவசாயிகள் மீது கார் மோதி விபத்து. இதனை தொடந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் 50 க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகன பிரச்சாரம் கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் துவங்கி 13 மாவட்டங்கள் வழியாக வந்து ஞாயிறு காலை புதுச்சேரி வழியாக கடலூர் மாவட்டத்திற்கு வந்தது. சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தில் பிரச்சார பயணத்தினர் சென்ற போது எதிரே வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் விவசாயி தர்மராஜ் இரு சக்கர வாகனம் மீது மோதி பலத்த காயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பி.ஆர். பாண்டியன் தலைமையிலான விவசாய குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடலூர் எஸ்பி விஜயகுமார் விவசாயிகளை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து பிரச்சார பயணம் சிதம்பரம் நோக்கி சென்றனர். பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி வறண்டு, விவசாய நிலங்களெல்லாம் காய்ந்து மக்கள் குடி தண்ணீருக்கு காலி குடங்களுடன் தெருவில் அலைகின்றனர். மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு அந்த வழக்குகளில் தவறிழைக்காமல் வாதாடி காவிரியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை பெற்று தர வேண்டும். பச்சை துண்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைக்க கூடாது. காவிரி பிரச்சனையில் திமுக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதே போல் மே 3 ம் தேதி தமிழ் நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களையும் தடுத்து நிறுத்தி மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும். இதில் திமுக தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய பி.ஆர். பாண்டியன், நாங்கள் கடந்த 25ம் தேதியில் இருந்து இன்று வரை 13 மாவட்டங்களை கடந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தோம். மாவட்ட எல்லையில் இருந்து போலீஸார் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. இருந்தும் எங்கள் பிரச்சார பயணம் தொடர்ந்து நடந்தது. புதுச்சத்திரத்தில் வந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எங்களது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் தர்மராஜ் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.