
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் என ஐபிஎல் போட்டியைப் பார்த்து விட்டு சென்ற நிலையில் சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு அங்கிருந்து மெட்ரோ மூலம் சேப்பாக்கம் சென்று போட்டியை பார்த்துள்ளனர்.
பின்னர் ஆலந்தூர் மெட்ரோவிற்கு சென்று நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சாப்பிடுவதற்காக அதிவேகமாக ஆலந்தூர் மெட்ரோ அருகில் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சென்டர் மீடியம் தூணில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.