
மதுரையில் கண்மாயில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு இறந்து கிடந்தது யார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மதுரை மாவட்டம் விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள ஈச்சனேரி கண்மாய் அருகே நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது. பாதி எரிந்த நிலையில் முகம் முழுவதும் சிதைந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். அங்கு பதிந்த வாகனத்தின் டயர் அச்சுகளை வைத்தும், மோப்பநாய் உதவியுடனும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட அந்த நபர் தனிப்படை காவலர் என்பது தெரியவந்துள்ளது. விருதுநகரை சேர்ந்த மலையரசன் சிவகங்கை காளையார்கோவில் தனிப்படை காவலராக பணியாற்றி வந்த நிலையில் அவர் அங்கு சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.
சடலமாக கிடந்த காவலரின் மனைவி அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி காயத்துடன் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை நன்றி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் மனைவி உயிரிழப்பு தொடர்பான ஆவணங்கள், பில்களை பெறுவதற்காக காவலர் மலையரசன் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஈச்சனேரி கண்மாயை ஒட்டிய பகுதியில் மலையரசன் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். உயிரிழந்து யார் என கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் இது கொலையா அல்லது தற்கொலையா எனத் தெரியாமல் மர்மமே நீடித்து வரும் நிலையில் விசாரணையும் ஒருபுறம் நீண்டு வருகிறது.