
பண்ருட்டி அருகே புதுப்பேட்டையை அடுத்த மணந்தமிழ்ந்த புத்தூர் கிராமத்தின் சாலையில் உள்ள கடைகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புதுப்பேட்டை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையொட்டி புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் அசோகன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் நந்தகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் கடை வைத்து நடத்தும் உறையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(36), புஷ்பராஜ்(28) ஆகியோர் கடைகளில் மூட்டை மூட்டையாக போதை புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இதன் மொத்த எடை 21 கிலோ என்றும், இதே போல் இவர் தொடர்ந்து ரகசியமான முறையில் போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து வழக்குப் பதவி செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். போதை புகையிலைப் பொருட்களை பிடிப்பதற்கு தீவிரமாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து வாழ்த்து கூறினார்.
மேலும் புதுப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இதே போல் சட்டத்திற்கு புறம்பாக ஆன்லைன் லாட்டரி, மணல் திருட்டு, புள்ளித்தாள் சூதாட்டம், புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை, கள்ளத்தனமாக டாஸ்மார்க் மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றால் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். கிராமப் பகுதிகளில் இதுபோன்று மூட்டை மூட்டையாக போதை புகையிலை பொருட்கள் கைப்பற்றிய சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.