Skip to main content

மழை வெள்ளம்; பச்சிளங்குழந்தையுடன் ஆட்டோவில் சிக்கித் தவித்த பெண்ணை மீட்ட இளைஞர்கள்! 

Published on 13/10/2024 | Edited on 13/10/2024

 

புதுச்சேரிக்கு அடுத்து புதுக்கோட்டை தான் நகரின் அழகான வடிவமைப்புக்குச் சிறப்பு வாய்ந்தது. எத்தனை கனமழை பெய்தாலும் சாலையில், வீதிகளில் தண்ணீர் தேங்காது. மழைத் தண்ணீர் செல்ல ஒரு கால்வாய், சாக்கடைத் தண்ணீர் செல்ல ஒரு கால்வாய் எனத் தனித்தனி கால்வாய்கள் அமைக்கப்பட்டு சாக்கடைத் தண்ணீரை வீணாக்காமல் புல் வளர்க்கப் பயன்படுத்தப்பட்டது. மழைத் தண்ணீர் நகரின் மையப்பகுதியில் உள்ள பல்லவன் குளத்திற்குச் சென்று அங்கு நிரம்பியது நகரில் உள்ள அடுத்தடுத்த குளங்களுக்குச் சென்று நிரம்பும் கடைசியாக காட்டுப்புதுக்குளம். அத்தனை நீரையும் உள்ளங்கி கொள்ளும் "கொள்ளிடம்". இதனால் நகர மக்களுக்கு எந்தக் காலத்திலும் தண்ணீர் பிரச்சனை வந்ததில்லை. இது மன்னர் ஆட்சிக்கு பிறகும் பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால் தற்போது நகரில் அமைக்கப்பட்ட அத்தனை வடிகால் வாய்க்கால்களும் ஆக்கிரமிப்புகளாலும் குப்பைகளாலும் மூடிக்கிடக்கிறது. இதனால் சிறு மழைக்கே அழகான நகரம் தண்ணீர் தத்தளிக்கிறது. நகர மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை இரவு புதுக்கோட்டை நகரில் 4 மி.மீ மழையே பெய்தது. இந்த மழைத் தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் நகருக்குள் நுழைந்தது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வடக்கு 7ஆம் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய மழைத்தண்ணீரில் ஒரு ஆட்டோவில் பச்சிளங்குழந்தையுடன் ஒரு தாய் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் குழந்தையையும் தாயையும் பத்திரமாக மீட்டனர். எவ்வளவு பெரிய கனமழை பெய்தாலும் மழை ஓய்ந்த சில மணி நேரத்தில் ஒரு துளி தண்ணீரைக் கூட காணமுடியாத நகரமைப்புக் கொண்ட பெருமை மிகு புதுக்கோட்டையில் தற்போது ஒரு மணி நேரம் பெய்த மிகக் குறைவான மழையிலேயே நகரம் தத்தளித்தது வேதனை அளிப்பதாக மாநகர மக்கள் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம் முழு ஆக்கிரமிப்புகளும் சரியான மராமத்து இல்லாததுமே என்கின்றனர். மேலும் பல்லவன் குளம் முதல் நாளே நிரம்பியதால் வரத்துவாரியை அடைத்ததும், புதுக்குளம் புனரமைக்க வேண்டும் என்பதால் தண்ணீரைத் தடுத்து வைத்திருப்பதும் இன்றைய மழைத்தண்ணீர் தேங்கக் காரணம் என்றனர். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அருணா, மாநகர மேயர் திலகவதி மற்றும் மாநகர ஆணையர் நாராயணனுடன் நகரின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். ஆங்காங்கே உள்ள வரத்துவாரி ஆக்கிரமிப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருணா செய்தியாளர்களிடம் பேசும் போது, “அதிக மழை இல்லை ஆனால் தண்ணீர் தேங்கிவிட்டது. பல்லவன் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாரியில் பூக்கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளது. உடனே சரி செய்ய சொல்லிவிட்டோம். அதே போலப் புதுக்குளம் வேலை நடப்பதால் அடைக்கப்பட்டிருந்தது. அதனைத் திறக்கச் சொல்லியாச்சு. மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதே போல நகரின் வடிகால் வாரிக்கான பழைய வரைபடம் கேட்டிருக்கிறேன் அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்” என்றார்.

தொடர்ந்து கேப்பரை சாலையில் அதிகமான ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் தேங்குவதாகக் கூறியதையடுத்து தடிகொண்ட அய்யனார் திடல் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த போது சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவும் அங்கு வந்து ஆய்வில் பங்கேற்றார். பல வீடுகள், கடைகள் எனக் கட்டடங்கள் வாரியை ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்து ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுங்கள் என்று ஆணையரிடம் கூறினார். இதில் பல கட்டடங்களும் வாரிக்குள் வருவதால் சில ஆளும் அரசியல் புள்ளிகள் கட்டடங்களை கை வைக்காமல் அகற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் சொல்லி முட்டுக்கட்டை போடுகின்றனர். இப்போதைய முனைப்புடன் ஆட்சியரின் உத்தரவை மாநகராட்சி ஆணையர் நிறைவேற்றினால் புதுக்கோட்டை நகரம் மீண்டும் பழைய புதுக்கோட்டையாகப் புதுப்பொழிவு பெறும். இல்லை ஆளுங்கட்சியினரின் முட்டுக்கட்டைக்கு இணங்கிப் போனால் மாநகராட்சி தண்ணீரில் மிதக்கும், சாக்கடையில் நாறும் மாநகராட்சியாகக் காட்சியளிக்கும். 

சார்ந்த செய்திகள்