‘வாகன காப்பகம் தற்காலிகமாக இயங்கவில்லை. இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு இரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.’ என மதுரை ரயில்வே மேற்கு நுழைவு வாயில் வாகன காப்பகச் சுவரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதே ரயில்வே வளாகத்தில், ‘இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை’ என அறிவிப்பு பலகை ஒன்றைத் தொங்கவிட்டுள்ளது காவல்துறை. ஆனாலும், திருட்டு போனால் போகட்டும் என்றோ, அப்படி எதுவும் நடக்காது என்ற அசட்டுத் துணிச்சலினாலோ, ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள், மதுரையிலிருந்து தினமும் வெளியூருக்குச் சென்று திரும்பும் ரயில் பயணிகள்.
அந்த வாகன காப்பகத்தில் நிறுத்தியிருந்த தனது டூ வீலரை, இட நெருக்கடியின் காரணமாக வெகு சிரமப்பட்டு வெளியில் எடுத்துக் கிளம்பிக்கொண்டிருந்த சங்கர்குமார் நம்மிடம் “இங்கு நிறுத்தும் டூ வீலர் திருடுபோனால், காணாமல் போனால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்று பொறுப்பில்லாமல் கூறுகிறது ரயில்வே நிர்வாகம். இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை என்று அறிவிப்பு வெளியிட்டு, திருடர்களை சுதந்திரமாக திருடவிட்டு வேடிக்கை பார்க்கிறது காவல்துறை.
மத்தியிலும், மாநிலத்திலும் அரசு நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்கு இதைவிடவா சான்று வேண்டும்? கட்டணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு தருவதற்காகத்தானே வாகன காப்பகம் கட்டிவிட்டிருக்கின்றனர்? மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வாகன காப்பகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்க வேண்டாமா? ஒப்பந்தகாரர் இல்லையென்பதால், டோக்கன் வாங்காமல், வேறு வழியின்றி இங்கே வாகனத்தை நிறுத்திவிட்டுப் போகிறோம். வெளியூர் வேலைக்குப் போகும் எங்களால் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. வாகனம் நிறுத்திய இடத்தில் இருக்குமா? திருடு போயிருக்குமா? என்ற மன உளைச்சல் திரும்பவந்து வாகனத்தைக் கண்ணில் பார்க்கும் வரை பாடாய்ப்படுத்தும்” என்றார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் செல்வராஜை தொடர்புகொண்டு கேட்டபோது “வாகன காப்பகத்தின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. டென்டர் போட்டு எல்லாம் ரெடியாக இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக டென்டரை அவார்ட் பண்ணாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். விதிகளின்படி பழைய ஒப்பந்தத்தையும் நீடிக்க முடியாது. பயணிகள் நலன் கருதி விதிகளை மீறி செயல்பட்டால், எங்களுக்கு சம்மன் வரும். தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாளிலேயே, ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வந்து, வாகன காப்பகம் இயங்க ஆரம்பித்துவிடும்.” என்றார்.
“லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் பலரும் வாங்குகின்றனர். சுயநலம் என்றால் சட்டத்தை மீறுகின்றனர். பொதுநலன் என்றால் அதே சட்டத்தைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்வர். மக்களைக் காக்க வேண்டிய சட்டமும் விதிமுறைகளும் பொதுநலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாமா? திருடர்களுக்குத் துணை போகலாமா?” என்று சினந்தார் சங்கர்குமார். சட்டம் என்ற இருட்டறையில் பாமரனின் பார்வைக்கும் கேள்விக்கும் ‘வெளிச்சம்’ தேட முடியாது!