![Relatives, including Vijayabaskar's brother, raided the house!](http://image.nakkheeran.in/cdn/farfuture/2KmhyHKTAB3tmaowQs4rHgXBpeiAPIaYiiKy8n8au2s/1634525594/sites/default/files/inline-images/Z22.jpg)
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.
அவர் மீதான முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள போலீசார், வருமானத்திற்கு அதிகமாக 27.22 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், மதர் தெரசா பெயரில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என 14 கல்வி நிலையங்களை அவர் நடத்திவருவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
![udanpirape](http://image.nakkheeran.in/cdn/farfuture/1NgK2NGgGtBZaw1p3ckmAgizQib1TnSrXxGTveya7qI/1634525540/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_186.jpg)
புதுக்கோட்டை இலுப்பூரில் 29 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் மற்றும் அவரது உதவியாளர் குருபாதம் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கம், புதுப்பட்டினத்தில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரி இல்லம் மற்றும் மருத்துவமனையில் சோதனை செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் தேவரியம்பாக்கத்தில் முன்னாள் உதவியாளர் அஜய்க்கு சொந்தமான தனியார் பள்ளியிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.