நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட புத்தகத்தை இன்று மாலை இந்து என்.ராம் வெளியிடவிருந்த நிலையில், அந்தப் புத்தக வெளியீட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பாரதி புத்தகாலயத்தின் விற்பனை நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த 200 புத்தகப் பிரதிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நெருக்கடி நிலைக்காலத்தில் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி நிலையை கேலி பேசும் மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர். அரசுக்கு எதிராக எழுதுவதையோ, பேசுவதையோ சகித்துக்கொள்ளும் மனப்பான்மை மோடி அரசுக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக நீதிமன்றம் மூலமாக எந்த தடையும் இல்லாத நிலையில், அந்த ஊழல் தொடர்பாக ஹிண்டு நாளிதழ் வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையி எழுதப்பட்ட புத்தக வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாக” கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நக்கீரனிடம் தெரிவித்தார்.