புதுக்கோட்டை அருகே நெய்வாசல்பட்டி கிராமம். பாண்டி மகள் முத்துலெட்சுமி. கடந்த ஆண்டு திருமணமான முத்துலெட்சுமி தலைப்பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு வந்தார். கஜாவின் ஆட்டம் தொடங்கிய 16- ந் தேதி அதிகாலை. முத்துலெட்சுமிக்கு பிரசவ வலி. தங்கி இருந்த வீடு ஆட்டம் கண்டது. பிரசவம் என்றதும் புயலையும் பொருட்படுத்தாமல் வந்தார் ஆட்டோக்காரர். ஆட்டோவில் முத்துலெட்சுமியை ஏற்றிக் கொண்டு புறப்படும் போது தங்கியிருந்த கூரை வீடு கஜாவின் ஆட்டத்தில் தரைமட்டமானது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துலெட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அழகான ஆண்குழந்தை பிறந்தது.
பிரசவத்தின் போது பிரச்சினை இருந்ததால் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை வரை மருத்துவமனையில் இருந்த முத்துலெட்சுமி அன்று மதியம் வீடு திரும்பினார். பிறந்த குழந்தையுடன் தாய் வீடு திரும்பிய முத்துலெட்சுமியும் புது வரவான குழந்தையும் தங்க வீடு இல்லை.
உடனடியாக வீடு கட்ட வசதியில்லாத குடும்பம். துவித்தது. அருகிலேயே ஆட்டுக்கொட்டகையில் முத்துலெட்சுமியும் குழந்தையும் தங்க வைக்கப்பட்டனர். வெட்டவெளியில் ஆடுகளை கட்டுவதற்காக தாழ்வாகக் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் கடந்த 4 நாட்களாக முத்துலெட்சுமி தங்கி வருகிறார். பகலில் கொழுத்தும் வெயில் இரவில் பனி. சாரல்.. அத்தனையும் பொருத்துக் கொண்டு குழந்தையை அணைத்துக் கொண்டு தங்கி இருக்கிறார். சுற்றிலும் எந்த தடுப்பும் இல்லை.
இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த காப்பிட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் என்.கண்ணம்மாள், வி.லதாராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் வெட்டவெளியில் தன்னந்தனியாக இருக்கும் வீடும் உடைந்து கிடக்கிறது. அருகில் உள்ள பந்தலில் குழந்தையுடன் ஒரு பெண் இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த காட்சியை அருகில் சென்று பார்த்தார்கள் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த முத்துலெட்சுமியையும், குழந்தையையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கொண்டு வந்த பொருள் பத்தாது என்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான மெத்தை, துணிகள், சோலார் விளக்கு, கொசுவர்த்தி, ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்களை உடனே வாங்கி வந்து வழங்கினார்கள். அதன் பிறகும் அந்த வெட்ட வெளி தங்கள் தான் அந்த தாய்க்கும் குழந்தைக்கும்.
புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இப்படி அவதிப்பட்டு வரும் முத்துலெட்சுமியையும், குழந்தையையும் பற்றிய எந்த தகவலும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை போலும். இனிமேலாவது இன்றைய மழையில் தவிக்கும் தாய்க்கும் குழந்தைக்கும் தங்க வசதி செய்து கொடுப்பார்களா பார்க்கலாம்.
இந்த தகவல் அறிந்த ஒரு தன்னார்வ தொண்டர்கள் குடிசை அமைக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். அரசாங்கம் ஒரு நல்ல வீட்டை கட்டிக் கொடுத்தால் நல்லது.