நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் பிரசாரத்துக்கு சென்ற பாஜகவினரிடம் சானிட்டரி நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பற்றி இளம்பெண் சங்கீதா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பாஜகவினர் இளம் பெண்னிடம் தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி சின்னசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சங்கீதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆடத் துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை - திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? சிந்தியுங்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவை மாவட்டம் சிங்காநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளைம் 28ஆவது வார்டு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று (11.04.2024) இரவு 10.40 மணியளவில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சார்ந்த ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.