புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் மொய்விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கீரமங்கலம், மேற்பனைக்காடு பகுதியில் கடந்த மாதம் மொய் விருந்துகள் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல் உள்ளிட்ட கிராமங்களில் ஆடி மாதம் மட்டுமே மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முதல் வடகாடு பகுதியில் மொய் விருந்துகள் தொடங்கிவிட்டது.
![c](http://image.nakkheeran.in/cdn/farfuture/PgkrLIDjKu_xhdHglv2SyMX17XDpJAl-tx1bHs3GRMM/1563459912/sites/default/files/inline-images/cctv_3.jpg)
வடகாடு பகுதியில் மொய் விருந்துகளில் பலருக்கும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொய் வாங்குவார்கள். சிலர் ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரை மொய் பணம் வாங்குவார்கள். அதனால் பணம் வாங்கவும், பணத்தை எண்ணி கட்டு போடவும் வங்கி அதிகாரிகளையும் அழைத்து வருவார்கள். மேலும் கடந்த ஆண்டு முதல் பணம் எண்ணும் இயந்திரங்களும் வாடகைக்கு எடுத்து வந்து பணம் எண்ணிய சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்த நிலையில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மொய் செய்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பல நேரங்களில் கள்ளநோட்டுகள் மொய் பணத்துடன் கலந்துவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் சமையல் அறையில் வைக்கப்பட்டுள்ள அசைவ உணவுகளும் காணாமல் போவதாக கூறப்பட்டு வருகிறது.
அதனால் இந்த ஆண்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் கலந்துவிடுவதை தடுக்கும் விதமாக மொய்விருந்து பந்தல் மற்றும் மேலும் உணவில் யாரும் மர்ம நபர்கள் கலப்படங்கள் செய்துவிடாமல் தடுக்க உணவு பாதுகாப்பு அறைகள், உணவு அறைகள் என்று 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக வடகாட்டில் மொய்விருந்து பந்தலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.