நாம நல்லா இருக்கனும் என்பதற்காக எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் துப்புறவுப் பணியாளர்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களைக் கண்டாலே தூரமாக ஒதுங்குவதும், முகம் சுளிப்பதும் அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனாலும் தங்கள் பணி ஊரை சுத்தமாக வைத்து மக்களுக்கு நோய் வராமல் தடுப்பது.. கடமையை செய்வோம்.. பலனை எதிர்பார்க்க வேண்டாம் என்று அதிகாலை முதல் தங்கள் பணியை செய்து கொண்டே போகிறார்கள்.
இந்தநிலையில்தான் எந்த ஒரு திட்டத்திலும் முதன்மையாக விளங்கும் புதுக்கோட்டை துப்புறவுப் பணியாளர்களின் மனதை படிப்பதிலும் முதன்மையாக செயல்பட்டிருக்கிறது. மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம். பணிக்கு வந்த சில நாட்களில் தனது பணியை சிறப்புடன் செய்யத் தொடங்கினார். தடைகள் பல கடந்தார். இப்போது ஆதரவாக சுகாதாரத்துறை இருப்பதால் தான் செய்ய நினைப்பதை செய்து கொண்டிருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டு கர்ப்பிணியாக்கப்பட்டு சாலை ஓரங்களில் கிடந்த இளம் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சையும், பிரசவமும் செய்து வந்தார். எந்த ஊரில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் யார் நின்றாலும் அவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சையும், அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவுரையும் வழங்கி அனுப்பி வைக்கிறார்.
மனநல வியாழன் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தொடங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை விரிவு செய்து ஒவ்வொரு நாளும் ஒரு மருத்துவமனையில் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கி வருகிறார். 104 அவசர அமைப்புகளுக்கு என்று தனி இலவச அழைப்பும் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில்தான் மாநிலத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை நகரை தூய்மையாக வைத்திருக்கும் துப்புறவுப் பணியாளர்கள் எந்த அளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏன் மனநல ஆலோசனைகள் வழங்க கூடாது என்று முடிவெடுத்து. நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனிடம் (பொ) இது பற்றி பேச.. அவரும் முகாம் நடத்தலாமே என்று சொன்னதால் 18 ந் தேதி பழைய மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சுகாதரா இணை இயக்குநர் சந்திரசேகரன் தலைமையில் முகாம் தொடங்கியது.
முகாமில் 103 துப்புறவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் தனித்தனியாக பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களிடம் பேசிய போது தான்.. நாங்கள் நகரை காத்து மக்களை நோயின்றி வைத்திருக்கிறோம். ஆனால் எங்களை இந்த சமூகம் இழிவாக பார்க்கிறது என்ற மன அழுத்தம் அதிகமாக இருப்பது பண்டறியப்பட்டது. அதேபோல தாங்கள் தான் இப்படி சாக்கடையோடு புரண்டு வருகிறோம் எங்கள் குழந்தைகள் நல்லா படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. பலரும் அய்யா இதுவரை எங்களை யாரும் கண்டுக்கல. ஒரு காய்ச்சல்ல நாங்க கிடந்தாலும் மெடிக்கல்ல மாத்திரை வாங்கி போட்டுக்கும் வந்து சாக்கடை அள்ளுவோம். உங்க உடல் நலன் பற்றி நாங்க கவலைப்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக எங்கள் உடல்நலனில் அக்கரை கொண்டு எங்களையும் சக மனிதாக மதித்து ஆலோசனை சொல்றீங்க பாருங்க அதுவே எங்களுக்கு மன நிறைவா இருக்கும் என்றும் பலரும் பல அழுத்தங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதில் 32 பேருக்கு மன அழுத்த பிரச்சனை இருப்பதும் 15 பேருக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு போதிய ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாங்க வந்து உங்கள் குறைகளை மனம் விட்டு சொல்லுங்க அப்பறம் உங்களுக்கு மன அழுத்தம் இருக்காது என்று மருத்துவர் குழுவினர் சொன்ன போது.
அய்யா எங்களையும் மதிச்சு சிகிச்சை கொடுத்தீங்களே உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கிறோம் என்று சொல்ல செல்பி எடுத்துக் கொண்டு விடை பெற்றார்கள். இதேபோல ஒவ்வொரு மாவட்டதிலும் துப்புறவுப்பணியாளர்களுக்கு சிறப்பு மனநல முகாம்கள் நடத்தி அவர்களின் மன அழுத்தம் குறைத்தால் சிறப்பாக இருக்கும்.