![Pudukottai fisherman's body buried Minister Tribute to in person!](http://image.nakkheeran.in/cdn/farfuture/vIA47ChfPGQ6W7J0sQ8sBv3hG9fL1Q9xf6MC76pFRXU/1634988424/sites/default/files/inline-images/th_1344.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி 118 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அதில் ஒரு படகில் ராஜ்கிரண், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், 19ஆம் தேதி அதிகாலை ஆழ் கடலில் வைத்து இலங்கை கடற்படையின் கப்பல் ராஜ்கிரண் ஓட்டிச்சென்ற படகின் மீது மோதியதில் மூவரும் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர். இதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ராஜ்கிரண் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த தகவல் அறிந்து கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மீனவர் ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. அவரது உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அத்தோடு கைது செய்யப்பட்ட மற்ற இரு மீனவர்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார். கைது செய்யப்பட்ட மற்ற இரு மீனவர்கள் குடும்பத்திற்கும் தலா ஐம்பதாயிரம் வழங்கினார். தொடர்ந்து மூன்று நாட்களாக இலங்கை அரசு சடலத்தைக் கொடுப்பதாக அறிவித்து ஆனால் ஒப்படைக்காமலேயே இருந்தது.
![Pudukottai fisherman's body buried Minister Tribute to in person!](http://image.nakkheeran.in/cdn/farfuture/esi7Wfec0-EhPBLRw82lqrPp1taNZmqJmgV2LXAl9eg/1634988514/sites/default/files/inline-images/th-1_2069.jpg)
இந்நிலையில், இன்று (23ஆம் தேதி) அதிகாலை இந்திய கடற்படையிடம் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பதினோரு பேர் ஆழ்கடலுக்குச் சென்று ராஜ்கிரண் உடலை பெற்று கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கரையில் வந்து சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆகியோர் அஞ்சலி செலுத்தி தமிழக அரசு அறிவித்திருந்த ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை ராஜ்கிரணின் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.
![Pudukottai fisherman's body buried Minister Tribute to in person!](http://image.nakkheeran.in/cdn/farfuture/qXzFoaNkOV7nptvkvScoOB7G_1r7RtxjJFRS1cH4G7A/1634988529/sites/default/files/inline-images/th-2_523.jpg)
சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ராஜ்கிரணின் உடல், ஆம்புலன்சில் ஊர்வலமாக மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கதறியழுத பலரும் மயக்கமடைந்து தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதேபோல தொடர்ந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் படகுகளை உடைத்து மூழ்கடித்துக் கொல்லப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு இந்திய அரசு இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்திய மீனவர்கள் கொல்லப்படும் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று அங்கு வந்திருந்த மே 17 இயக்க திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கூறினார்.