தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகள் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அதே போல தமிழ்நாட்டில் பல இடங்களிலும் ரேஷன் கடை ஊழியர்களின் துணையோடு பல மில் முதலாளிகள் பொது மக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்று கோழித் தீவணங்களாக மாற்றி அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தொடர்ந்து நள்ளிரவில் அரிசி கடத்தல் நடப்பதாகத் தகவல் கிடைக்க காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த குட்டியானை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இது போன்ற ரேஷன் அரிசி மூட்டைகள் வல்லத்திராகோட்டையில் இருந்து ராமலிங்கம் செட்டியார் என்பவருக்கு வருகிறது என்றும் இந்த அரிசிகளை கலியுல்லா நகரில் உள்ள அரிசி அறவை மில்லில் கோழித் தீவணமாகவும், ரவையாகவும் மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
குறிப்பிட்ட ரைஸ் மில்லில் சோதனை செய்த போது அங்கும் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட குட்டி யானை ஓட்டுநர் கறம்பக்குடி அதிரான்விடுதி கருப்பையா மகன் நாகராஜன் (29) கைது செய்யப்பட்டதுடன், அரிசி மூட்டைகளுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நாகராஜன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது காதலி குளமங்கலம் கஸ்தூரியைக் கொலை செய்து கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.