Skip to main content

கடல் சீற்றம்; படகு கவிழ்ந்து விபத்து! 

Published on 27/11/2024 | Edited on 27/11/2024
sea ​​rage Boat overturned incident
மாதிரி படம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது.

இதனையடுத்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024) மாலைக்குள் புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் நாகையில் இருந்து தென் கிழக்கு திசையிலும் 370 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து 470  கி.மீ. தென் கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

முன்னதாக மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என்றும், மறு அறிவிப்பு வரும் வரை படகுகளைக்கடற்கரையில் நிறுத்த வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம் தையல் தோணித்துறை என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் பைபர் படகில் கடலுக்குச் சென்றனர். அப்போது கடல் சீற்றம் காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்கள் தனியார் தொழிற்சாலைக்கான கப்பல் இறங்கு தளத்தில் ஏறி உயிர் தப்பினர். இது குறித்த தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அங்கிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். கடலுக்குச் சென்ற மீனவர்களின் பைபர் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்