Skip to main content

ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் ஈரோடு வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

 

 "அவருக்கு ஐம்பது போலீஸ் போதாதா?" அப்புறம் எதுக்குங்க ஆயிரம் போலீஸ் இங்க நிக்கறாங்க.  அப்படி யார் தாங்க வர்றாங்க? இப்படித்தான் ஈரோடு ரயில் நிலைய வளாகம் முழுக்க நிரம்பியிருந்த போலீசாரைப் பார்த்து அப்பாவி மக்கள் கேள்வி எழுப்பினார்கள். கடைசி வரை போலீசார் வருவது யார் என்று கூறவே இல்லை. 

 

m

 

"ஒரு நபருக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்றால் அனேகமாக அந்த நபர்......" இப்படி பலர் பேசத் தொடங்கினார்கள்.   காலை 11.30 க்கு வந்த இன்டர்சிட்டி ரயிலில் வந்த அந்த வி.ஐ.பி.யை மூன்றடுக்கு பாதுகாப்புடன் புல்லட் புரூப் காரில் போலீசார் பத்திரமாக எங்கோ அழைத்துச் சென்றனர். அந்த வி.ஜ.பி.யை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்பதே உண்மை. 

 

அவர் தான் பிரதமர் மோடிக்கே உத்தரவடும் இடத்தில் உள்ளவர். இந்தியாவின் மற்றொரு அதிகார மையத்தின் தலைமையகமாக இருக்கும் நாக்பூர் முகாமின் தலைவர்.  இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சின் தலைவர் மோகன் பகவத்....!

 

ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  ஆர்.எஸ்.எஸ் சார்பில் மண்டல முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாம் இன்று மாலை தொடங்கி வரும் 9-ந் தேதி வரை  4 நாட்கள் நடைபெற உள்ளது.

 

இந்த முகாமில் பங்கேற்கத் தான்  ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று  ஈரோடு வந்தார்.  மோகன் பகவத்க்கு பிரதமர், ஜனாதிபதிக்கு கொடுக்கப்படும்  இசட் பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .  இதனால் 24 மணி நேரமும்  துப்பாக்கி ஏந்திய போலீசார்  அவருக்கு பாதுகாப்பாக உள்ளனர்.

 

ஈரோடு நகர்  பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து காளைமாடு சிலை ,தீயணைப்பு நிலையம், காந்திஜி ரோடு, பன்னீர்செல்வம் பார்க்  பிரப்ரோடு ,பெருந்துறை ரோடு ,கலெக்டர் அலுவலக பகுதி,  செங்கோடம்  பள்ளம்  வரை 700 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

 

பயிற்சி முகாம் நடைபெறும் பள்ளியைச் சுற்றிலும் 300 போலீசாரை கொண்ட டீம்  3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மோகன் பகவத் ஈரோடு வருகை  ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் தான் என்றாலும் பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் அரசியல் ரீதியாகவும் ஆர்.எஸ்.எஸ் -ன் நிலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.

சார்ந்த செய்திகள்