![pudhuchery central jail](http://image.nakkheeran.in/cdn/farfuture/uzZSrPEzSvEx8QincnSj3P9RQOr-zeBfjG4gOjP8b9Q/1598101483/sites/default/files/inline-images/18_12.jpg)
புதுச்சேரி மத்தியச் சிறையில் உள்ள பெண்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில்லை என்றும், போதிய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும், புதுச்சேரி உத்திரவாகினிப் பேட்டையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் வி.பீமராவ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், பெண்களுக்கான சிறையில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதாகவும், அவர்கள் உறங்குவதற்கு தேவையான படுக்கைவசதிகள் இல்லாததால், தரையில் உறங்க வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டப்படி, புதுச்சேரி பெரிய காலாப் பேட்டையில் 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் மத்தியச் சிறையில், தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், பெண் கைதிகள் என மூன்று பகுதிகளாக அமைக்கப்படவில்லை.
ஆனால், அதற்கு மாறாக, தண்டனைக் கைதிகளுக்கு ஒரு பகுதி, விசாரணை மற்றும் பெண் கைதிகளுக்கு மற்றொரு பிரிவு என இரண்டு மட்டுமே ஒதுக்கப்பட்டடுள்ளது. இரண்டாவது பிரிவில் உள்ள பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூம்களில் பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. பெண்களுக்குத் தனி மருத்துவமனை இல்லை. அடிப்படைத் தேவைகளுக்கும் கூட ஆண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தாண்டி, பொதுப்பாதை வழியாகச் செல்லும் நிலைக்கு பெண் கைதிகள் தள்ளப்பட்டுள்ளது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.
சிறைக்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் ஒரே வழி அமைக்கப்பட்டுள்ளதால், ஆண் கைதிகளின் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக்குப் பெண் கைதிகள் ஆளாகின்றனர். பழைய சிறைச்சாலை கட்டிடம் காலாவதியாகிவிட்டதால், அதை இடிக்க வேண்டுமென முடிவெடுத்துத்தான், புதிய சிறைச்சாலை கட்டப்பட்டது. ஆனால், பழைய கட்டிடம் இடிக்கப்படவில்லை.
எனவே, புதுச்சேரி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களை, உடனடியாக தனியாகப் பிரிப்பதற்கும், அடிப்படை வசதிகளுடன் கூடிய தனிச் சிறையில் அவர்களை அடைப்பதற்கும், புதுச்சேரி அரசு தலைமைச் செயலாளர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ivcz__3NP0Kg7DKSZn9v4NaT8EzjPE1uO3Obz6YN1s/1590822160/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் இரண்டு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.