விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கட்டளை, கீழ்பூதேரி, பெருமுக்கல், தென்னம்பூண்டி, குருவம்மாபேட்டை, அழகியபாக்கம், கீழ்அருங்குணம், பிரம்மதேசம், வெள்ளகுளம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஜல்லி உடைப்பதற்காகவும், எம் சாண்ட் மண்ணை தயாரிப்பதற்காகவும் நூற்றுக்கும் மேற்பட்ட கல் உடைக்கும் க்ரஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஜல்லி உடைக்க பயன்படுத்தும் குவாரிகளிலிருந்து அரசு அனுமதித்துள்ள அளவை விட அதிகமாக ஆழப்படுத்தி கற்களை உடைத்து எடுப்பதாக கிராம மக்கள் தரப்பில் அவ்வப்போது கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கின்றனர். எந்த அதிகாரியும் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் இயங்கும் க்ரஷர்களால்வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இரவு பகல் பாராமல் தொடர்ந்து இயங்கும் க்ரஷ்ர்களால் ஏற்படும் காற்று மாசு சாலையில் வாகனம் ஓட்டிச் செல்வோருக்கு கண்களில் பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. கல்குவாரி வழியாக வெளியேறும் மாசுகளால் அந்தப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச கோளாறு, தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் மிக அதிக அளவில் ஏற்படுவதாகவும், காற்றில் அடித்து செல்லப்படும் க்ரஷர் பவுடர்கள் வீட்டின் உள்ளே வரை வருவதால் உணவிலும், பாலினும் சாம்பல் படிந்து விடுகிறது. மேலும் துவைத்து காயப் போட்ட துணிகளிலும் மண் படிந்து அதை உடுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன. இப்படி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
க்ரஷ்ர் பவுடர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் படிந்து விடுவதால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சாலை ஓரம் உள்ள மரங்களில் க்ரஷர் பவுடர் படிந்து மரங்கள் வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. காலப்போக்கில் அந்த மரங்கள் அப்படியே பட்டுப்போய் விடும் என்கிறார்கள். கல் உடைப்பதற்காக குவாரிகளில் வைக்கப்படும் வெடி பொருட்களால் மேலும் மேலும் காற்று மாசுபடுவதுடன் அருகே உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைகிறது. இவைகளைப் பற்றி அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்கின்றனர் கிராம மக்கள்.
மேலும் திண்டிவனம் – மரக்காணம் பகுதியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.