"ஜெ" மறைவுக்குப் பிறகு முதல்வர் இருக்கை தனக்குக் கிடைக்காமல் போய்விடும் என பீதி ஏற்பட்டு தர்மயுத்தம் செய்வதாக கிளம்பிப்போனார், ஓ.பன்னீர்செல்வம். அந்த கேப்பில் சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து பா.ஜ.க. டெல்லி தயவுடன் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் எடப்பாடியோடு இணைந்து கொண்டார்.
இரண்டு அணிகளும் அப்போது சசிகலாவையும், சசிகலா குடும்பத்தையும் விலக்கி வைப்பதாகவும் அந்தக் குடும்பத்தோடு எங்களுக்கு இனிமேல் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறி வந்தது. இந்த வாய்ப் பேச்சுக்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சசிகலா குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரகசியமாக "டீலிங்" வைத்துக் கொண்டுதான் உள்ளார். அந்த "குட்டு" இப்போது உடைந்துள்ளது.
ஆம்,சசிகலாவின் சகோதரர் திவாகரனின் சம்பந்தி போலீஸ் அதிகாரியான ஜெயச்சந்திரன். இவரது மகளை தான் திவாகரன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆக, திவாகரனின் சம்பந்தி ஆகிறார் ஜெயச்சந்திரன். திவாகரனுக்கு சம்பந்தி என்றால் சசிகலாவுக்கும் அதே சம்பந்தி உறவுதான். மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது டிஎஸ்பி ஆக இருந்தவர் ஜெயச்சந்திரன். அப்போது சசிகலா குடும்பத்துடன் அதிக நெருக்கத்தில் இருந்த ஜெயச்சந்திரன் போலீஸ் துறையில் மறைமுகமாக அதிகாரம் செலுத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாக இவருக்கு ஏடிஎஸ்பி பதவி உயர்வு சசிகலா மூலம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த இரண்டு வருடமாக பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார் ஜெயச்சந்திரன்.
கோவை போலீஸ் பள்ளியில் ஏடிஎஸ்பி ஆக பணியில் இருந்தார். இன்று 61 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்திரவு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதில் இந்த ஜெயச்சந்திரனுக்கு தற்போது எஸ்.பி ஆக ஐ.பி.எஸ். அந்தஸ்துடன் பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜெயச்சந்திரன் சூப்பரெண்ட் ஆப் போலீஸ் என சென்னை போலீஸ் அகாடமியில் கூடுதலாக ஒரு பணியிடம் ஏற்படுத்தி தந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா குடும்பத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என வெளியே கூறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதே குடும்பத்தின் சம்பந்தியான போலீஸ் அதிகாரி ஜெயச்சந்திரனுக்கு ஏ ஏ டிஎஸ்பியிலிருந்து எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி சசிகலாவுக்கு விசுவாசமாக நடந்துள்ளார். இதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியின் ரகசிய "டீலிங்" என்கிற குட்டு உடைந்து விட்டது என அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.