திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குப் போதிய அழுத்தத்துடன் சீரான அளவில் குடிநீர் வழங்கும் நோக்கில் பெரியார் நகர், கம்பரசம்பேட்டை நீர் சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீள்சுற்று வட்டக் குழாய்கள், புதிதாக மோட்டார் பம்பு செட், டீசல் ஜெனரேட்டர், புதிதாக முதன்மை சமநிலை நீரேற்ற தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம், நடைபாலம் மற்றும் தரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பணிகளின் தொடக்க விழா திருச்சி உறையூர் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “17 வார்டுகளில் 24/7 குடிநீர் வழங்கும் வகையில் 28.5 கோடி ரூபாய் செலவில் இந்தப் பணி இன்று (06.08.2021) தொடங்கப்பட்டுள்ளது. விநியோகிக்கக் கூடிய தண்ணீர் கலங்கலாக இல்லாமல் சுத்தமான குடிநீராக வழங்கும் வகையில் புதிய இயந்திரம் (Aerator) 5 கோடி ரூபாய் செலவில் வைக்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க தேவையான திட்டம்தான் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம். அங்கிருந்து போதுமான அளவு தண்ணீர் விநியோகிக்கும் வசதி உள்ளது. மக்கள் தொகை பெருகினாலும் அத்திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்க மேலும் பல வசதிகள் செய்து தரப்படும். அடுத்த ஓர் ஆண்டில் திருச்சி மாநகராட்சி மக்களுக்கு 24/7 என்கிற அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படும்.
ஏற்கனவே போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் சரி இல்லாத காரணத்தால் குடிநீரோடு சாக்கடை நீர் கலக்கிறது. அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கம்பரசம்பேட்டையில் குடிநீர் விநியோகிக்கப் பயன்படும் பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகள் சரி செய்யப்படும். திமுகவினர் எதிர்ப்பை சமாளிக்கும் வலுவோடுதான் இருப்பார்கள். திமுக சந்திக்காத எதிர்ப்பா, எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் திமுக. அண்ணாமலை புதிதாக பாஜகவின் தலைவராகியிருக்கிறார், அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இதுபோன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கழிவு நீரை ஆறுகளில் கலப்பதைத் தடுக்கும் வகையில் திட்டம் உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.