சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக சமீபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 நபர்களை ஜெ.ஜெ.நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் செல்போனில் இருக்கும் எண்களை கொண்டு கஞ்சா விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்(26) நம்பரும் அதில் இருந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். அவரோடு கைதான 7 பேருக்கும் நீதிமன்ற காவல் வழங்கி அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் அலிகான் துக்ளக் ஜாமீன் வழங்க கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் கைது செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அலிகான் துக்ளக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது. அவருக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.