டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா எடப்பாடி பழனிசாமி?. சுரங்கம் அமைக்க முயலும் மத்திய பாஜக அரசை ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவ்ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது’ என சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் போராட்டகாரர்கள் திரண்டனர். அங்கிருந்து நடை பயணம் செல்ல முயன்ற போராட்டக்காரர்களிடம் ‘வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துங்கள்’ என போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதனை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அவர்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல் துறை, அதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைதான், ‘காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது’ என இட்டுக்கட்டி பொய் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் அமைதி வழியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதோடு விவசாயிகளுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் முழுமையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் அதை வைத்து, தன் சுயநல அரசியல் வண்டியை ஓட்டலாம் என கழகுபோல காத்திருந்த பழனிசாமிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்நிலையில் வழக்கம் போல பொய் பெட்டியை திறந்து தமிழ்நாடு அரசு விவசாயிகள் பேரணிக்கு அனுமதியே கொடுக்கவில்லை என விதைக்க ஆரம்பித்துவிட்டார் பொய்ச்சாமி பழனிசாமி. முதுகெலும்புள்ள எதிர்க் கட்சி தலைவராக இருந்திருந்தால் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் தனது பதிவில் தப்பித்தவறி கூட டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் மத்திய பாஜக அரசை பற்றி ஒரு வரி அல்ல ஒரு வார்த்தை கூட இடம்பெறாத படி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி. பழனிசாமியின் வீரம் எல்லாம் அவ்வளவுதான். நாம் அவரை கோழை என்று சொன்னால் குப்புறப்படுத்து அழுவார்.
மோடி அரசை கண்டிக்கும் வகையில்தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் முன்னெடுத்தார்கள். இந்த விஷயம் எல்லம் லாவகமாக மறைத்துவிட்டு பொய் முலாம் பூச முற்பட்டிருக்கிறார் பழனிசாமி. ஆனால், அந்த பொய் ஒவ்வொரு முறையும் அம்பலப்பட்டு நிற்கிறது. மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என சொன்னதோடு மட்டுமல்லாது தான் முதலமைச்சராக உள்ளவரை மத்திய அரசு டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க விட மாட்டேன் என நெஞ்சுரத்தோடு கூறி டங்கஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆனால் அதிமுகவோ டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க காரணமான சட்ட திருத்தத்தை மத்திய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்த போது வழிய சென்று ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டு உரிமையை மத்திய அரசின் காலடியில் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தது. பழனிசாமியின் அந்த துரோகத்தை காலம் உள்ளவரை மக்கள் மறக்கமாட்டார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கருணையேயின்றி காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக்கொன்ற எடப்பாடி பழனிசாமி, இன்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என நடிப்பது “கொடூர கொலைகாரன் நல்லொழுக்க வகுப்பெடுப்பதற்கு ஒப்பானது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரை கண்டிக்க துப்பில்லை, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி, வெள்ள நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒதுக்காத மத்திய அரசை கண்டிக்க வக்கில்லை. துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார் என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொடுத்த ஷாக் புத்தியில் ஏறவில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் என்ற இருப்பை காட்டிக்கொள்ள மட்டும் ஆளாய் பறக்கிறார். அதிமுகவின் பொது செயலாளர் என்பதையும் மறந்து பாஜக தலைவரைப் போல நடந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு நலனுக்காக எந்த குரலும் கொடுக்காமல் தனது அரசியல் ஆதாயத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு பாஜக வோடு கள்ளக் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.