காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர், மாளிகையில், ஜனவரி 11ஆம் தேதி (11.1.2025 - சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.