2015ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 27 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால் அதிகாரிகளால் வளர்ச்சிப் பணிகளைச் சரிவர கண்காணிக்க முடியவில்லை என்றும், தலைமையிடமாக உள்ள கடலூருக்கு மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளிலிருந்து, செல்வதற்கு 120 கிலோ மீட்டர் தொலைவு உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் கூறி கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தங்க. தனவேல் தலைமையில் பாலக்கரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தர்ராஜன், நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில்குமார், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டிபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள், பா.ம.க, த.வா.க, வி.சி.க., த.மு.மு.க, விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகளை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு, ‘காலம் தாழ்த்தாமல் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே விருத்தாசலம் மாவட்டம் அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வீட்டிற்கு சென்று, அவரது மகன் வெங்கடேசனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து கடைவீதி, கடலூர் சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோட்டாட்சியர் ராம்குமாரிடமும் கோரிக்கை மனு அளித்தனர். அதனை தொடர்ந்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம் மனு அளிப்பதற்காக ஊர்வலமாக வந்த போது சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் நுழைவாயிலின் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்து கலைந்து சென்றனர்.