வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பம் தனியார் திருமண மண்டபம் அருகே நாடாளமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராமலிங்க ராஜா வை ஆதரித்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி பேசுகையில், அம்மாவின் இறப்பிற்கு காரணமான மன்னார்குடி மாபியா கும்பலுக்கு உன்னுடைய எம்எல்ஏ பதவியை அடகு வைக்கிறாய் சட்டமன்ற உறுப்பினர் பதவியை வியாபாரம் செய்துள்ளனர். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி இந்த தொகுதியில் வெற்றி பெறும், அதன் மூலம் உங்களுக்கு சரியான சவுக்கடி கொடுப்போம். எதிரியை கூட மன்னித்து விடுவோம், துரோகிகளை மன்னித்த வரலாறு கிடையாது. துரோகி கூட்டம் ஊருக்குள்ளே விடக் கூடாது ஒவ்வொரு கட்சி தொண்டர்கள் தாய்மார்களும் அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும், அவர்கள் செய்த தவறை புரிந்து கொள்ள வேண்டும் என்று அமுமுக தொண்டர்கள் வாக்கு கேட்டு வந்தால் விரட்டுங்கள், தாக்குங்கள் எனப்பேசினார்.
இக்கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜா வுக்கு கட்சி தொண்டர் ஒருவர் வேட்பாளரிடம் கட்சி துண்டை அளிப்பதற்காக வந்தபோது, அமைச்சர் வீரமணி அதனை தடுத்தார். கோபமான தொண்டர் ஏன் தடுக்கறிங்க எனக்கேள்வி எழுப்பினார். இது அமைச்சருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. என்னையே கேள்வி கேட்கறியா என தொண்டாரை அடிக்கப்பாய்ந்தார். கட்சி நிர்வாகிகள் அவரை பிடித்துக்கொண்டனர். தொண்டருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மேடையில் இருந்து அவரை அப்புறப்படுத்தினர் தொண்டர்கள்.
இதனைப்பார்த்து மேடையில் இருந்த வேட்பாளர்கள் இருவரும் அதிர்ச்சியாகிவிட்டனர்.