சேலத்தில் தீபாவளி பண்டிக்கைக்கு புதிய துணிமணிகள் வாங்க கணவர் வர மறுத்ததால் விரக்தி அடைந்த பெண் காவலர், கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் லைன்மேடு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன். சேலம் மாநகர ஆயுதப்படையில் இரண்டாம்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சூர்யா (25). புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரை, ஒன்றரை ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சூர்யாவும், சேலம் மாநகர ஆயுதப்படையில் இரண்டாம்நிலைக் காவலராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவருமே பணியில் இருப்பதால், குழந்தையை புதுக்கோட்டையில் உள்ள சூர்யாவின் பெற்றோரே வளர்த்து வருகின்றனர்.
கணவன், மனைவிக்கு இடையில் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த மோகன், குமாரசாமிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் அவருடைய தந்தை ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று விட்டார்.
நேற்று குமாரசாமிப்பட்டிக்கு சென்ற சூர்யா, தீபாவளி பண்டிகையையொட்டி தனக்கும், குழந்தைக்கும் புது துணிமணிகள் வாங்க வேண்டும் என்று மோகனிடம் கூறியுள்ளார். அவர் மீது கோபத்தில் இருந்த மோகன், தன்னால் துணிக்கடைக்கு வரமுடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, லைன்மேட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்த சூர்யா, வாழ்வில் வெறுப்பு அடைந்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். அதனால், வீட்டில் இருந்த கொசு ஒழிப்புக்குப் பயன்படுத்தப்படும் 'ஆல்அவுட்' மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது கணவரிடமும் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன், வீட்டுக்கு வந்து பார்த்தபோது சூர்யா மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம், கணவருடனும், மாமியாருடனும் ஏற்பட்ட தகராறில் சேலம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்ப நல ஆலோசகர்கள் மூலம் காவலர் குடும்பத்தினருக்கும் உரிய நேரத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.