
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி ஒன்றியம் கடற்கரை மீனவ கிராமம் பொன்னகரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 2017 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் நடுநிலைப் பள்ளியில் உள்ள 3 வகுப்பறை கட்டடங்களை இரவல் பெற்று ஒரு வகுப்பறையை கணினி ஆய்வகமாகவும், இரு வகுப்பறைகளில் 10 ம் வகுப்பு மாணவர்கள் பயிலவும் பயன்படுத்தி வந்தனர். விரைவில் கட்டடம் கட்டப்படும் என்ற நம்பிக்கையில் மற்ற வகுப்பு மாணவர்கள் மரத்தடியை வகுப்பறைகளாக்கிக் கொண்டனர். 8 ஆண்டுகள் கடந்தும் ஒற்றை கழிவறை தவிர வேறு எந்த கட்டடமும் கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து 6 பொதுத் தேர்விலும் மாணவர்கள் சாதித்தனர்.

இந்த சூழலில் தங்கள் குழந்தைகள் படிப்பிற்காக வெயிலிலும் மழையிலும் அவதிப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என ஒவ்வொருவரையும் பல முறை நேரில் பார்த்து மனு கொடுத்தும் பயனில்லை என்று கூறுகின்றனர். பள்ளிக்கான நிலத்தைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகளிடம் பேசி உடனே வாங்கிக் கொடுத்துவிட்டார். சில மக்கள் பிரதிநிதிகள், “எனக்கா ஓட்டுப் போட்டிங்க..” என்று முகத்திற்கு நேராகவே கேட்பதாக கூறும் பெற்றோர்கள் மனம் நொந்துபோய் தங்கள் குழந்தைகள் இனியும் வெயிலில் வேக வேண்டாம் என்று அவசர அவசரமாக நிதி திரட்டி ரூ.10 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டினர். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்காக ஒரு பெரிய தற்காலிக தகர கொட்டகையும் அமைத்துக் கொடுத்தனர்.
இருப்பினும், நிரந்தரமாக ஒரு பள்ளிக் கட்டடம் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதைப் பார்த்த பெற்றோர்கள், பள்ளிக் கட்டடம் கிடைக்கும் வரை எங்கள் குழந்தைகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத மாட்டார்கள் என்று தேர்வு புறக்கணிப்பு செய்ய போவதாக முடிவெடுத்தனர். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகள் வகுப்பறை கட்டடங்கள் இல்லாத பொன்னகரம், கோட்டைப்பட்டினம், திருநாளூர் தெற்கு உள்பட சில பள்ளிகளுக்கும் கூடுதல் வகுப்பறைகள் பல பள்ளிகளுக்கும் விரைவில் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். இந்த செய்தி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியான நிலையில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விபரங்களை கேட்டுப் பெற்றதோடு மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு செய்யாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் பொன்னகரம் பள்ளி நிர்வாகத்திடம் பேசி விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும், அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ஆகவே மாணவர்கள் தேர்வு எழுத அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியதுடன் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயந்தியை பள்ளிக்கே அனுப்பி வைத்தார். அதன்பிறகு, பொன்னகரத்தில் இருந்து 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 60 மாணவ, மாணவிகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தனி வேன்களில் ஏற்றி மணமேல்குடி தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்க கூடாது என்று கூறிய அதிகாரிகள் விரைவில் வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தனர். அதன் அடிப்படையிலேயே எங்கள் குழந்தைகளை தேர்வுக்கு அனுப்புகிறோம். மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதச் சென்றுவிட்டார்களே என்று மீண்டும் கால தாமதம் செய்தால் வரும் கல்வியாண்டில் மொத்த மாணவர்களை பள்ளிக்கே அனுப்பமாட்டோம் என்கின்றனர் பெற்றோர்கள். ஆனால், இந்த பள்ளிக்கு நிச்சயம் கட்டடம் கட்டப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.