Skip to main content

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க அனுமதி!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்! 

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

privates college fees coronavirus lockdown chennai high court

 

தனியார் கல்லூரிகள், 2020 இல் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 இல் ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில், அதன் பொதுச் செயலாளர், பழனியப்பன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர்கள் சங்கம் சார்பாக வக்கீல் விஜயானந்த் வாதாடினார்.

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்ப, மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது. இதன் பின்னணியில், இந்த வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில், இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

 

அந்தப் பதில் மனுவில், கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வுகளை எப்போது நடத்துவது என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து இதுவரை முடிவெடுக்காத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை.  ஊரடங்கு காரணமாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பெற்றோரால், குழந்தைகளின் கல்விக் கட்டணங்களைச் செலுத்த இயலாத நிலை உள்ளது. தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து இருப்பு நிதி வைக்கப்படுவது உண்டு.

 

ஆசிரியர்களுக்கு, அந்த இருப்பு நிதியைப் பயன்படுத்தி ஊதியம் வழங்கலாம். அதனால், கல்லூரி நிர்வாகங்களில் நிதியில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரர் சங்கம், தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், நிலுவைக் கட்டணங்களை பெற்றோருக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் கோரி, கடந்த ஜூன் 30-  ஆம் தேதி அரசுக்கு மனு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

http://onelink.to/nknapp

 

இந்தக் கோரிக்கை மனுவைப் பரிசீலித்த தமிழக அரசு, தனியார் கல்லூரிகள், ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021  ஏப்ரல் மாதங்கள் என, மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக, அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக,  நாளை (10- ஆம் தேதி) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்