மருத்துவ அவசர நிலை காலகட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் பொது மக்களின் உடல் சிகிச்சையில் அக்கறை இல்லாமல், அனைத்தையும் அரசும், அரசு மருத்துவமனைகளுமே பார்க்கட்டும் என, வழக்கமான பொது சிகிச்சைக்கு வரும் மக்களை உதாசீனப்படுத்தும் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறுகிறார் த.மா.கா. இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா.
மேலும் அவர், "இந்தியாவில் வரலாறு காணாத வகையில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், சில தனியார் மருத்துவமனைகள் அத்தியாவசிய சேவைகளை தர மறுப்பது மிகவும் மனவேதனை அளிக்கிறது. இதில், டயாலிசிஸ் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி (Chemotherapy) தரப்படுவதில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்து, நரம்பியல் நோய்களுக்கு தேவையான சிகிச்சையையும் தர மறுக்கிறார்கள் அதுபோல, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளையும் தர மறுக்கிறார்கள். மேலும், இதயம் சம்பந்தமான நோய்களுக்கும் சிகிச்சை தர மறுக்கிறார்கள். கரோனா பரிசோதனையை ரூபாய் 4,500 க்கு பதில் ரூபாய் 500 க்கு செய்ய வேண்டும்.
மேலும் இந்த கரோனா வைஸுக்கு மட்டும் சிகிச்சை அளித்தால் மற்ற நோயினால் மனிதன் மரணத்தை தழுவ நேரிட்டால் என்ன செய்வது? எனவே மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பொதுவான மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் த.மா.கா இளைஞரணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.