திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகளை இயக்க மத்திய – மாநில அரசுகள் அனுமதி தந்துள்ளது. 30 சதவித தொழிலாளர்களுடன் பணிகளை தொடங்கலாம் எனவும், அவர்களை அழைத்து வருவதும், திரும்ப கொண்டு விடுவதோடு, அவர்களின் பாதுகாப்புக்கு உறுதி ஏற்கவேண்டும் என்கிற உத்தரவோடு அனுமதி அளித்துள்ளன.
அதனை தொடர்ந்து மே 11ந் தேதி முதல் தொழிற்சாலைகள் படிப்படியாக திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 70 நிறுவனங்கள் திறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கான தொழிலாளர்களை நிறுவனங்கள் தங்களது பேருந்துகள் மூலமாக அழைத்து வந்து வேலை செய்ய வைத்துள்ளன.
தொழிற்சாலைகளில் சரியான முறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? பாதுகாப்பாக பணி செய்ய வைத்துள்ளார்களா? என்பதை காவல்துறை வடக்கு மண்டல தலைவர் நாகராஜ் ஐ.பி.எஸ், மே 12ந் தேதி தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
தொழிற்சாலை உரிமையாளர்களிடம், சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், அதனை காவல்துறை அடிக்கடி வந்து உறுதி செய்துக்கொள்ளும். அரசின் உத்தரவுகளை சரியாக கடைப்பிடிக்கவில்லையென்றால் நடிவடிக்கை இருக்கும் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.