வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தும், ரியல் எஸ்டேட் அதிபர் அவதூறாக பேசியதால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ராமாபுரம் கிராமத்தில் வசிப்பவர் சரவணன் (40). இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா (30). இவரது மகன் சக்திவேல் (12), மகள் மகாலட்சுமி (10). சரவணன் கடந்த 2 வருடங்களுக்கு முன் தனது கிராமத்தில் வீடு கட்டியுள்ளார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவரிடம் வட்டிக்கு ரூபாய் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன் அந்த பணத்தை சரவணன் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி தெரியாத ரமேஷின் உறவினர்கள், சரவணனின் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சரவணன், நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதை பார்த்த சுதா, பாட்டிலில் மீதி இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை கணவனிடம் இருந்து பறித்து தானும் குடித்து, 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். நள்ளிரவில் எரிச்சல் ஏற்பட்டு குழந்தைகள் கூக்குரலிட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். இதற்கிடையே சரவணன் உட்பட 4 பேரும் சுயநினைவு இழந்து மயக்கமுற்றனர். அவர்கள் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில், சரவணன் உள்பட 4 பேரையும் ஏற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து, திருவாலங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.