'தமிழக அரசுதான் மருத்துவப் படிப்பில், பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது' என ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சில நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசும் போது, “எதிர்க்கட்சிகள் இப்போது 7.5% இட ஒதுக்கீடு குறித்து கேள்வி கேட்கின்றன. ஒதுக்கீட்டுக்கான முயற்சியை மேற்கொண்டு சட்டம் இயற்றியது அ.தி.மு.க அரசுதான். 7.5% இட ஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும்" என்றார்.
.
மேலும் அவர் கூறுகையில், "எனது கோபிசெட்டிபாளையம் தொகுதியான வெள்ளாள பாளையம் பஞ்சாயத்தில் ஆரம்ப கூட்டுறவுச் சங்கத்தில் ரூபாய் 26 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில், ரூபாய் 86 லட்சம் கடனுதவி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இப்பஞ்சாயத்தின் நிகர வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் மட்டுமே. ஆனால், ரூபாய் 6 கோடி அளவிலான வளர்ச்சிப் பணிகள் நடப்பாண்டில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்டனர். அதுவும் ஏற்கப்பட்டது. அங்குள்ள பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடமும் ஆய்வுக் கூடமும் கட்டும் பணி நடந்துவருகிறது. வரும் டிசம்பருக்குள் பணி முடிவடையும். இங்குள்ள மக்களுக்கு நாதிபாளையம் பகுதியில் கட்டப்பட்டுவரும் குடிசை மாற்று வாரிய வீடுகள், வருகிற ஜனவரியில் இலவசமாக வழங்கப்பட்டுவிடும். ஒரு சிறிய கிராமப் பஞ்சாயத்துலேயே இந்த அளவுக்கு வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடைபெறுகிறது என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு பணிகள் இந்த அரசின் சார்பாக நடைபெறுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆக நமது முதல்வர் தலைமையிலான இந்த ஆட்சி மக்களாட்சியாக உள்ளது.” என்று தெரிவித்தார்.