Skip to main content

ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்கு! தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: திருமா வலியுறுத்தல்

Published on 23/04/2018 | Edited on 23/04/2018


ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்கு! தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஊடக நிறுவனங்களையும் பெண் ஊடகவியலாளர்களையும் ஆபாசமாக இழிவுப்படுத்திப் பதிவுச் செய்திருந்தார். அதை தமிழ்நாட்டில் அமைச்சர் ஜெயகுமார் உட்பட அனைவருமே கண்டித்தனர். எஸ்.வி.சேகர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் தமது கண்டனத்தை ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர்கள் எஸ்.வி.சேகர் வீட்டின் முன் கூடினர். அப்போது அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் எஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்ததாகக் கூறப்படுகிறது. அதை காரணமாகக் காட்டித் தமிழக காவல்துறை பெண் ஊடகவியலாளர்கள் உட்பட முப்பது பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். வேண்டுமென்றே புனையப்பட்ட இந்த பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

பொய் வழக்குகள் பதியப்பட்ட ஊடகவியலாளர்களைப் பணியிலிருந்து நீக்குமாறு எஸ்.வி.சேகர் தரப்பில் அழுத்தம் தரப்படுவதாகத் தெரியவருகிறது. இது பாதிக்கப்பட்டவர்களையே பழிவாங்கும் நடவடிக்கையாகும். எஸ்.வி.சேகரின் பதிவில் ஊடக உரிமையாளர்களும்தான் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவுப்படுத்துகிறோம். அதற்காக ஊடக உரிமையாளர்கள் சார்பில் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச்செய்யாமல் அதிகார நெருக்குதலுக்கு அடிபணிந்து ஊடகவியலாளர்களைப் பலியிடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் பாதுகாவலன். இதில் எந்த சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பிற அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஊடகவியலாளர்களையும், ஊடகச் சுதந்திரத்தையும் காப்பதற்கு முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்