அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் குழந்தையுடன் கீழே தலைகுப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்திலிருந்து பண்ருட்டி, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு தனியார் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தனியார் பேருந்துகள் போட்டி காரணமாக அதிவேகத்தில் இயக்கப்படுவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று நெல்லிக்குப்பம் பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடித்து நின்றது.
இதனால் பேருந்தில் கைக்குழந்தையுடன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தலை குப்புற சாலையில் விழுந்தார். சாலையின் ஓரத்தில் இருந்த கடை உரிமையாளர்கள் படுகாயத்துடன் அப்பெண்ணை மீட்டதோடு, பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநரை அடிக்க பாய்ந்தனர். இதுதொடர்பான காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.