கன்னியாகுமரி மாவட்டம், கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் உஷா. 38 வயதான இவர், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே, அமலேஷ் என்கிற 7 வயது மகன் இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த உஷா, 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஹெட் கான்ஸ்டபெல் உஷா, தினமும் ஸ்கூட்டியில் பணிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல், கடந்த 11 ஆம் தேதி அன்று, இரவு 7 மணி அளவில், காவல் நிலையத்தில் வேலையை முடித்துக்கொண்டு, அவரது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டைக்காடு பகுதிக்கு வந்த உஷாவை, அவருக்கு எதிரே வந்த இன்னொரு டூவீலர், பயங்கர வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில், 8 மாத கர்ப்பிணியான உஷா, தூக்கி வீசப்பட்டார். இதனால், அவரின் தலை, கால் பகுதிகளில் பலத்தக் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உஷாவை மீட்டு, அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காவலர் உஷா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த உஷா, உயிரிழந்த செய்தியை அறிந்த அவரது உறவினர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவலர் உஷா மீது டூவிலரை மோதிவிட்டு, நிற்காமல் சென்ற நபர் யார்? என போலீஸார் தீவிரமாகச் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது, அதிவேகமாக பைக் ஒட்டிய நபரின் பெயர் சஞ்சய் என்பது தெரியவந்தது. 19 வயதான இவர், கட்டைக்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும், சஞ்சய் மீது அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.