Skip to main content

பிப்ரவரி 28இல் பிரதமர் மோடி தமிழகம் வருகை!

Published on 14/02/2025 | Edited on 14/02/2025

 

Prime Minister Modi to visit Tamil Nadu on February 28

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்கு பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்த நவம்பர் மாதன் 13ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து இந்தியன் ரயில்வே வாரியத்தின் செயலருக்கு ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ‘பாலத்தை திட்டமிடுவதற்கு முன்பு, ரயில்வே வாரியம் தொழில்நுட்ப ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். ஆனால், பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் பிரச்சனைக்கான தீர்வு காண போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாலம் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக வழங்கப்பட்டுள்ள இண்டர்லாக் சர்கியூக்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை பாதுக்காப்பற்ற சூழலை வழிவகுக்கும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாலத்தில் குறைப்பாடுகள் இருப்பதாக வெளியான தகவல்  மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, பாலத்தின் சோதனை மற்றும் சரிபார்ப்பு முழுமையாக முடிந்த பிறகே, ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பாலத்தின் வடிவமைப்பைச் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் மும்பை ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆய்வு செய்து தரமதிப்பீடு வழங்கியுள்ளதாகவும், புதிய ரயில் பாலம் தரமான வடிவமைப்போடு கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாம்பன் புதிய பாலத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தியன் ரயில்வேயினுடைய கட்டுமான துறை அதிகாரிகள் குழு, ஆய்வு செய்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறிய குறைபாடுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் 100 சதவீதம் முடிந்திருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியிருந்தது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும் எனவும், கப்பல் செல்லும்போது 3 நிமிடங்களிலேயே தூக்கு பாலம் மேலே எழும்புவதற்கான மோட்டார் வசதி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த புதிய பாலத்தில் 75 கி.மீ வேகத்தில் ரயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனவும், 55 கி.மீ காற்று வீசினாலே எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் பிப்ரவரி 28ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தைப் பிப்ரவரி 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிப்ரவரி 26ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை செல்ல உள்ளார் எனக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்