சேலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மற்றும் துத்தநாக கட்டிகள், மதுபாட்டில்களை ஆகியவற்றை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தலையொட்டி பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆவணங்கள் இல்லாமல் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட தொகையை கொண்டு செல்ல, உரிய ஆதாரங்கள் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேலத்தில் புதன்கிழமை (மார்ச் 13, 2019) இரவு, கருப்பூர் சுங்கச்சாவடி அருகே, உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு பேருந்தில் சோதனை நடத்தினர்.
அந்தப் பேருந்தில் வந்த சந்தோஷ் (32) என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அவரிடம் இருந்து 1.30 ரூபாய் லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெங்களூருவில் இருந்து அருப்புக்கோட்டைக்குச் செல்வதாகவும், நண்பர் ஒருவரிடம் சொந்த தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும் கூறினார். எனினும், அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் பணத்தை உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுச்செல்லுமாறு அதிகாரிகள் கூறிவிட்டனர்.
அதே பகுதியில் வந்த மற்றொரு காரை தணிக்கை செய்ததில், பீர், பிராந்தி என 20 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலையில் ராஜாமணி தலைமையிலான பறக்கும்படை குழுவினர் ஒரு காரை தணிக்கை செய்தனர். அந்த காரில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1.72 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரில் வந்தவர், சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் தினேஷ்குமார் என்பதும், தன் குழந்தைக்கு பள்ளிக்கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக அந்தப்பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று (மார்ச் 14, 2019) காலை கருப்பூர் சுங்கச்சாவடி அருகே, உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையில் எஸ்எஸ்ஐ ராஜ்குமார், தலைமைக்காவலர்கள் அருள், நல்லதம்பி ஆகியோர் கொண்ட பறக்கும்படை குழுவினர், பெங்களூருவில் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த ராயல் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு பேருந்தை சோதனை நடத்தினர்.
அந்தப் பேருந்தில் ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து சோதனை செய்தபோது வெள்ளிக்கட்டி போன்ற உலோகம் 11 பார்கள் இருந்தன. அவற்றை சந்தேகத்தின்பேரில் எடுத்து வந்து சோதித்துப் பார்த்ததில் அவை துத்தநாகம் என்பது தெரிய வந்தது. மொத்தம் 222 கிலோ எடை இருந்த அவற்றின் மதிப்பு 55600 ரூபாய். வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும்போது உப பொருளாக துத்தநாகம் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. பேருந்து ஓட்டுநர் கண்ணையாவிடம், அந்த பார்சலை அனுப்பியவருக்கு தகவல் அளித்து, உரிய ஆதாரங்களைக் காண்பித்து துத்தநாக கட்டிகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து பறக்கும்படை அதிகாரி மணிகண்டனிடம் கேட்டபோது, ''தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் பொருள்கள், பத்து லட்சம் ரூபாய்க்குக் குறைவான ரொக்கம் ஆகியவை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு விடும். அவற்றுக்கு உரிய நபர்கள், உரிய ஆவணங்களைக் காண்பித்து ஓரிரு நாள்களில் பெற்றுச்செல்லலாம்,'' என்றார்.